நடிகர் விஜய் ஆண்டனி தனது படங்களில் அதிரடி ஆக்சன் காட்சிகளில் நடித்தாலும் பொதுவெளியில் பேசும்போது சமூக சிந்தனை கொண்ட கருத்துக்களை கூறுவதற்கும் தயங்குவது இல்லை. அவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ரோமியோ. இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதனால் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசி வருகிறார் விஜய் ஆண்டனி.
சமீபத்தில் கோவையில் ஒரு கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு படம் குறித்து பேசும்போது, விரைவில் நடைபெற இருக்கும் தேர்தல் குறித்தும் மாணவர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது, “நல்லது செய்பவர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதேசமயம் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு நல்லது செய்வதற்கும் வழிகள் இருக்கின்றன. மேலும் தேர்தலில் தவறாது வாக்களித்து ஒவ்வொருவரும் ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும். நமக்கு பிடித்த வேட்பாளர் யார் என்பதை விட நாட்டுக்கு அவர் என்ன நல்லது செய்கிறார் என்பதை கவனித்து ஓட்டு போட வேண்டும்.
அப்படி யாரோ ஒருவருக்கு கட்டாயம் ஓட்டு போட வேண்டும். அதே சமயம் யாரையுமே பிடிக்கவில்லை எனக் கூறி தயவுசெய்து நோட்டா பட்டனை யாரும் அழுத்திவிட வேண்டாம் என்று ஒரு கோரிக்கையும் மாணவர்கள் மத்தியில் பொதுமக்களுக்காக வைத்துள்ளார் விஜய் ஆண்டனி.