எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்தபடி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகிறார் என்கிற அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இது எந்த மாதிரியான கதையாக இருக்கும், இதில் ரஜினி எந்தவித கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றெல்லாம் ரசிகர்கள் ஆளாளுக்கு தங்களது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
லோகேஷ் கனகராஜ் தற்போது தனது குழுவினருடன் அமர்ந்து இந்த படத்திற்கான கதையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ரஜினி தன் கைகளில் தங்க கடிகாரங்கள் ஒன்றாக இணைக்கப்பட்ட விலங்கு போல் கைகளில் பிணைக்கப்பட்டது போல ஒரு போஸ்டர் ஒன்று வெளியானது.
இதை வைத்து ஆளாளுக்கு படத்தின் கதை இதுதான் எனக் கூறி வருகிறார்கள். இன்னொரு பக்கம் இந்த படத்திற்கு என்ன டைட்டில் என்பது குறித்து தற்போது ஒரு தகவல் கசிந்துள்ளது.
அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏற்கனவே நடித்த கழுகு என்கிற படத்தின் டைட்டிலை தான் இந்த படத்திற்கு வைக்க இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. காரணம் படத்தின் கதைக்கும் அவரது கதாபாத்திரத்திற்கும் இந்த டைட்டில் தான் பொருத்தமாக இருக்கிறதாம்.
ஆனால் இதில் என்ன ஒரு சிக்கல் என்றால் ரஜினி நடித்த கழுகு படம் வெளியான சமயத்தில் சரியாக போகவில்லை. இத்தனைக்கும் அந்த படம் விறுவிறுப்பான பரபரப்பான படம் தான். ஆனாலும் ஜனங்கள் அதை ஏனோ வெற்றி பெற வைக்கவில்லை. அப்படி ஒரு தோல்வி பெற்ற படத்தின் டைட்டிலை மீண்டும் ரஜினி படத்துக்கு வைக்க வேண்டுமா என்று தான் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.