சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தில் ஊரிலிருந்து மஞ்சப்பையை தூக்கிக் கொண்டு வருபவர்கள் சிலர் என்றால் நல்ல சம்பளம் வரும் வேலைகளில் அமர்ந்து கொண்டு சினிமா ஆர்வத்தில் வாய்ப்பு தேடி, கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமாக துடிப்பவர்கள் பல பேர் இருக்கின்றனர்.
அப்படி கேரளாவில் ரயில்வே துறையில் டிக்கெட் பரிசோதராக பணியாற்றி வந்த வினோத் என்பவர் சினிமா ஆர்வத்தில் அவ்வப்போது விடுமுறை எடுத்து படங்களில் நடித்து வந்தார். ஓரளவுக்கு மோகன்லால், மம்முட்டி உள்ளிட்ட பெரிய நடிகர்களுடன் இணைந்து நடித்த பிரபலமாகவும் மாறினார்.. அதே சமயம் தனது டிடிஆர் பணியையும் தொடர்ந்து செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இவர் கொச்சியில் இருந்து பாட்னாவுக்கு சென்ற ரயிலில் டிக்கெட் பரிசோதராக பணியாற்றினார். அந்த சமயத்தில் குடித்துவிட்டு டிக்கெட் எடுக்காமல் ஏறிய வடநாட்டு பயணி ஒருவரை அடுத்த ஸ்டேஷனில் இறக்கி விடுவதாக அவர் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பயணி கதவு அருகில் நின்றிருந்த டிடிஆர் வினோத்தை எதிர்பாராத விதமாக திடீரென வெளியே தள்ளி விட்டுள்ளார். இதனால் டிடிஆர் மரணம் அடைந்துள்ளார்.
தனது தொழிலிலும் சினிமாவிலும் திருப்தியான வாழ்க்கை வாழ்ந்து வந்த ஒரு மனிதரின் வாழ்க்கை யாரோ ஒரு குடிகாரனால் இப்படி நாசமாக போனதை ரசிகர்களாலும் திரையுலகில் அவருடன் பழகியவர்களாலும் ஜீரணிக்கவே முடியவில்லை.