நடிகர் அஜித் தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடா முயற்சி என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது இடைவெளி விட்டு தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் அஜர்பைஜானில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை திரும்பினார்கள்.
இந்த நிலையில் அஜித்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா என்பவர் தனது சோசியல் மீடியாவில் விடா முயற்சி படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அஜித்தும் வில்லனாக நடிக்கும் ஆரவ்வும் காரில் அமர்ந்திருப்பது போலவும் அஜித் வேகமாக காரை ஓட்டி வர திடீரென அந்த கார் விபத்துக்குள்ளாகி தலைகீழாக கவிழ்வது போலவும் காட்சி இடம் பெற்றுள்ளது.
விபத்துக்குள்ளான காரிலிருந்து அஜித் மற்றும் ஆரவ் எழுந்து வருகிறார்கள். இது படத்திற்காக செட்டப் செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட விபத்தா, இல்லை நிஜத்திலேயே படப்பிடிப்பில் எதிர்பாராமல் விபத்து ஏற்பட்டதா என ரசிகர்கள் பதட்டம் அடைந்தார்கள்.
இந்த நிலையில் இந்த காட்சியில் கூடவே நடித்த நடிகர் ஆரவ் கூறும்போது இந்த காட்சியை படமாக்கும்போது விபத்திலிருந்து நானும் அஜித் சாரும் மயிரிழையில் உயிர் தப்பித்தோம் என்று கூறியுள்ளார். அந்த வகையில் இந்த விபத்து எதிர்பாராமல் தான் நடந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.