இதுவும் ஒரு டைட்டில் பிரச்சனை கொண்ட செய்தி தான். பொதுவாகவே பல வருடங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றி பெற்ற, ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும் படங்களின் டைட்டில்களை இன்றைய இளம் தலைமுறை தங்களது படத்திற்கு எப்படியாவது வைத்து விட வேண்டும் என போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனர்.
இதில் ரஜினி படங்கள் மட்டுமல்லாது எம்ஜிஆர் படங்களின் டைட்டிலை பெறுவதற்கு கூட கடும் போட்டி இருக்கிறது. பல பெரிய நிறுவனங்கள் இப்படி தங்களிடம் வந்து டைட்டில் கேட்கும்போது ஏதோ ஒரு வகையில் போனால் போகிறது என்று கொடுத்து விடுகின்றனர்.
ஆனால் இயக்குனர் ஹரியைப் பொறுத்தவரை தன்னுடைய படங்களின் டைட்டிலை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது என்று ஒரு கடுமையான கோரிக்கையை வைத்திருக்கிறார். சாமி என்றால், சிங்கம் என்றால் அது அந்த ஒரு படமாக தான் கடைசி வரை இருக்க வேண்டும். அதை வேறு ஒரு படத்திற்கு வைத்து ஏற்கனவே வெற்றி பெற்ற படத்தின் பெருமையை கெடுக்கக்கூடாது.. அது எனக்கு உடன்பாடு இல்லை.. என்னுடைய தயாரிப்பாளர்களுக்கும் இப்படி என்னுடைய படங்களின் டைட்டிலை யாருக்கும் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என ஒரு கோரிக்கையும் வைத்துள்ளார்.
ஆம் இவர் சொல்வதைப் போல இப்போது தர்மதுரை ,மாப்பிள்ளை, தங்க மகன், வேலைக்காரன் என்றால் இப்போதைய ஹீரோக்களின் படங்களின் பெயரை தானே இன்றைய இளம் ரசிகர்கள் சொல்கிறார்கள், இது ரஜினி நடித்த படம் என்பது எத்தனை பேருக்கு தெரியப்போகிறது, அதனால் ஹரி சொல்வது சரிதான்.