விஷால் நடிப்பில் இதற்கு முன்பாக வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. விஷால் நடித்த படங்களிலேயே முதன்முறையாக 100 கோடி வசூலித்த படம் என்கிற பெருமையையும் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது ஹரி இயக்கத்தில் ரத்னம் என்கிற படத்தில் நடித்துள்ளார் விஷால்.
ஏற்கனவே தாமிரபரணி, பூஜை என இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இந்த கூட்டணி கொடுத்துள்ளனர். இப்போதும் கூட அந்த படங்களை டிவியில் போட்டால் டிஆர்பி ரேட்டிங் எகிறும். இந்த நிலையில் ரத்னம் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. மிகப்பெரிய அளவில் பிசினஸும் ஆகி இருக்கிறது.
ஆனால் சமீபத்தில் நடிகர் விஷால் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசும்போது மார்க் ஆண்டனி படத்தையே ரெட் ஜெயன்ட் மூவிஸ் கொஞ்ச நாள் கழித்து ரிலீஸ் செய்யுங்கள் என நெருக்கடி கொடுத்தார்கள். ஆனால் நான் சொன்ன தேதியில் தான் ரிலீஸ் செய்வேன் என்று கூறினேன்.. அதன்படி ரிலீஸ் செய்தேன். மிகப்பெரிய வெற்றியும் லாபமும் கிடைத்தது.
அதேபோலத்தான் இந்த ரத்னம் படத்திற்கும் ஏப்ரல் 26 ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்து விட்டோம்.. இதை மாற்றி வைக்கும்படி ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலம் இருந்து மீண்டும் ஒரு அழுத்தம் வந்தது. நான் மறுத்துவிட்டேன். என்ன நடந்தாலும் ஏப்ரல் 26 ஆம் தேதி ரத்னம் படம் ரிலீஸ் ஆகும் என்று கூறினார்.
இது தேர்தலில் மக்கள் வாக்களிப்பதற்கு முன்பாக உதயநிதி மீது விஷால் சுமத்திய குற்றச்சாட்டாக பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது திருச்சி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் விஷாலின் பழைய பாக்கியை செட்டில் செய்தால்தான் ரத்னம் படத்தை ரிலீஸ் செய்வோம் என்று குடைச்சல் கொடுக்க ஆரம்பித்து உள்ளார்களாம்.
இதற்கு காரணம் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை 4 படமும் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. அந்தப் படத்தையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தான் வெளியிடுகிறது. ஆனால் விஷால் ரத்னம் படத்தை வெளியிட பிடிவாதமாக இருந்ததால் அந்த படம் மே 5க்கு தள்ளிப் போய்விட்டது.
அதனால் தான் உதயநிதி தரப்பிலிருந்து விஷாலுக்கு குடைச்சல் ஆரம்பமாகிவிட்டது என்று சொல்லப்படுகிறது. இது குறித்து தனது வேதனையை பகிர்ந்து கொண்ட விஷால் கட்டப்பஞ்சாயத்தை ஆரம்பித்து விட்டார்கள் என்று கூறியுள்ளார்.