கடந்த சில வருடங்களுக்கு முன்பு புகழ்பெற்ற எம்ஜிஆர் சிவாஜி படங்களை டிஜிட்டலுக்கு மாற்றி ரீ ரிலீஸ் செய்யும் போக்கு ஆரம்பித்தது. இது மீண்டும் எம்ஜிஆர், சிவாஜி படங்களை தியேட்டரில் பார்க்க விரும்பிய அவரது ரசிகர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது. அப்படி வெளியிட்ட படங்களும் ஆரம்பத்தில் என்ன வரவேற்பு பெற்றதோ அதைவிட அதிகமாகவே வரவேற்பு பெற்றன.
குறிப்பாக சிவாஜியின் கர்ணன் படம் வெளியான சமயத்தில் பெரிய அளவில் போகவில்லை. ஆனால் ரீ ரிலீஸ் செய்யப்பட்டபோது மிகப்பெரிய அளவில் வசூலித்தது. அதன் பிறகு இந்த பட்டியலில் ரஜினிகாந்த் படங்களும் இணைந்து கொண்டன. அதற்கும் ரசிகர்கள் வரவேற்பு கொடுத்தார்கள்.
இவையெல்லாம் கிட்டத்தட்ட 15, 20 வருடங்களுக்கு முன்பு வெளியான படங்களை தான் ரீ ரிலீஸ் செய்து வந்தார்கள். அதன் பிறகு சமீபகாலமாக அஜித், விஜய் நடித்த படங்களையும் ரீ ரிலீஸ் செய்ய தொடங்கியுள்ளார்கள். அவை கூட இருபது வருடத்திற்கு முந்தைய படங்கள் தான்.
இந்த நிலையில் விஜய் சேதுபதி நடித்த படங்களையும் தற்போது ரீ ரிலீஸ் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்கள். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என பத்து வருடங்களுக்கு முன்பு அவர் நடித்த படங்களை ரீ ரிலீஸ் செய்ய இருக்கிறார்களாம்.
விஜய்சேதுபதி படங்கள் எல்லாமே வெளியாகி பத்து வருடங்களுக்குள் தான் ஆகின்றன. 10 வருடம் என்பது மிகக் குறைவே. இந்த படங்களை எல்லாம் சமீப கால ரசிகர்கள் பார்த்து ரசித்து இருப்பார்கள். அப்படி மீண்டும் ரீலீஸ் செய்து ரசிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இந்த படங்களுக்கு எல்லாம் இருப்பதாக தெரியவில்லை.
விஜய் சேதுபதி ஒரு நல்ல நடிகர் தான். நல்ல படங்களில் தான் நடிக்கிறார்.. என்றாலும் ரீ ரிலீஸ் செய்வதற்கான ஒரு காலகட்டம் என்று இருக்கிறது. மனசாட்சி இல்லாமல் ஏதோ ரீ ரிலீஸ் பண்ண வேண்டும் என்பதற்காக இப்படி செய்யக்கூடாது என்று பல ரசிகர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.