spot_img
HomeNewsதி லயன் கிங்' படம் வரும் ஜூலை 19ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது

தி லயன் கிங்’ படம் வரும் ஜூலை 19ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது

 
 
அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் உருவாகியுள்ள டிஸ்னியின் பிரமாண்ட லைவ் – ஆக்ஷன் படமான ‘தி லயன் கிங்’ படம் வரும் ஜூலை 19ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறது டிஸ்னி இந்தியா நிறுவனம். தி லயன் கிங் படத்தின் தமிழ் பதிப்பின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர்கள் அரவிந்த்சாமி, சித்தார்த்,ரோபோ சங்கர், சிங்கம் புலி ஆகியோர் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர்களுடன் உரையாடினர்.

1994 அனிமேஷன் வெர்சனில் வெளியான திரைப்படத்தின் புதிய பதிப்பு தான் ‘தி லயன் கிங்’. எங்கள் டிஸ்னி நிறுவனத்துக்கு இது ஒரு ஸ்பெஷலான படம். இது ஒரு குடும்ப உணர்வுகளை பேசும் படம். கதை சொல்லும் விதம் தனித்துவமாக இருக்கும். தந்தை, மகன் பாசம் தான் படத்தின் கரு. இந்திய மக்கள் பார்த்து மகிழ அவரவர் மொழிகளில் திரைப்படத்தை வெளியிடும் முயற்சியை எடுத்திருக்கிறோம். இதன் தமிழ் பதிப்பில் தமிழின் சிறந்த கலைஞர்களான சித்தார்த் (சிம்பா), அரவிந்த்சாமி (ஸ்கார்), ரவிஷங்கர் (முஃபாஸா), ஐஸ்வர்யா ராஜேஷ் (நாளா), ரோகிணி, சிங்கம் புலி (டிமோன்), ரோபோ சங்கர் (பும்பா), மனோபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்திருக்கிறார்கள். ஜங்கிள் புக் இயக்குனர் ஜான் ஃபேவரூ மிகச்சிறந்த தொழில்நுட்பத்தில் இந்த கதையை படமாக கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் முதன்முறையாக ஃபோட்டோ ரியல் என்ற புதுமையான தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருக்கிறோம். வரும் 19ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது என்றார் டிஸ்னி இந்தியா தலைமை அதிகாரி பிக்ரம் துக்கல்.

நேற்று வரை சிங்கம் புலியாக இருந்த என்னை லயன் கிங்காக மாற்றிய டிஸ்னிக்கு நன்றி. டிஸ்னி என்னை டப்பிங் பேச அழைத்தபோது முதலில் சிரமமாக நினைத்தேன். நிறைய முன் தயாரிப்புகளுடன் படக்குழுவினர் இருந்ததால், என்னால் முழுமையான உழைப்பை தர முடிந்தது. ஒரு நாளில் என் வேலையை செய்ய முடிந்தது. இந்த படத்துக்கு டப்பிங் செய்யும்போது நிறைய விதிமுறைகள் இருந்தன, அதனால் தான் இந்த படம் மிக தரமாக இருந்தது. தமிழ் படங்களுக்கு டப்பிங் செய்யும்போது நிறைய சமாளிப்புகள் செய்வோம், ஆனால் இங்கு அதெல்லாம் இல்லை. மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது என்றார் நடிகர் சிங்கம் புலி.

நான் முதலில் வெளியான லயன் கிங் படத்தையே பார்த்ததில்லை. ஒரு அனிமேஷன் படத்துக்கு டப்பிங் பேச கூப்பிடுறாங்களேன்னு தான் அங்கு போனேன். அதனாலேயே இந்த படம் பார்த்தபோது எனக்கு மிகவும் புதுமையான அனுபவமாக இருந்தது. வழக்கமான ஆங்கில பட டப்பிங் போல பேச வேண்டாம், ரோபோ சங்கர் குரல் தான் எங்களுக்கு வேண்டும், உங்கள் குரலிலேயே பேசுங்கள் என்றனர். நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள முடிந்தது என்றார் நடிகர் ரோபோ சங்கர்.

25 வருடங்களுக்கு முன்பு சிம்பாவுக்கு டப்பிங் குரல் கொடுத்தேன். ஒரு புதுமையான அனுபவத்துக்காக அப்போது டப்பிங் செய்தேன். ஸ்கார் தான் கதையை சுவாரஸ்யமாக்கும் ஒரு கதாப்பாத்திரம். நிறைய கலவையான உணர்வுகளை வெளிப்படுத்த முடியும். ஒரு நடிகன் என்றாலே எல்லா விதமான விஷயங்களையும் செய்ய வேண்டும் என விரும்புகிறேன். வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடிப்பதால் பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்த முடியும். நிறைய கற்றுக் கொள்ள முடியும். வில்லன் கதாபாத்திரத்துக்கு டப்பிங் பேசும்போது குரலில், பேச்சு வழக்கில் நிறைய வித்தியாசங்களை செய்ய முடியும். நிச்சயம் குழந்தைகளை அழைத்துக் கொண்டு குடும்பத்துடன் போய் பார்க்கும் படமாக இது இருக்கும் என்றார் நடிகர் அரவிந்த்சாமி.

லயன் கிங் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் பிடித்த ஒரு திரைப்படம். சாதாரண ஒரு கதையை மிகச்சிறப்பாக சொல்லும் போது அது மிகப்பெரிய வெற்றியை பெறுகிறது. அந்த வகையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெறும். என் முகத்தை மட்டுமே பார்த்து பார்த்து டப்பிங் செய்து போர் அடித்து விட்டது, இது கொஞ்சம் புதுமையாக இருந்தது. வாழ்க்கை ஒரு வட்டம், தேவையான நேரத்தில் தேவையான விஷயங்கள் நடக்கும் போன்ற மிகச்சிறந்த விஷயங்கள் இந்த படத்தின் மூலம் சொல்லப்பட்டிருக்கிறது. லயன் கிங் கதையை அமெரிக்காவில் மேடை நாடகத்தில் பார்த்து வியந்திருக்கிறேன். அதை மிகச்சிறந்த தொழில்நுட்பங்களை கொண்டு பெரிய திரையில் மிக பிரமாண்டமாக கொண்டு வந்திருக்கிறார்கள். ஜங்கிள் புக் படத்தையும் தாண்டி ஒரு விஷயத்தை இந்த படத்தில் சாதித்து காட்டியிருக்கிறார்கள். டப்பிங்கில் எப்போதுமே நாம் தான் கிங். அரவிந்த்சாமி, சிங்கம் புலி, ரோபோ சங்கர் டப்பிங் பேசுவதை பார்க்கவே மிகச்சிறப்பாக இருக்கும். ஜூலை 19ஆம் தேதி உங்களை போலவே நானும் இந்த படத்தை பெரிய திரையில் பார்க்க ஆவலாக இருக்கிறேன் என்றார் நடிகர் சித்தார்த்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img