spot_img
HomeCinema Reviewகாடுவெட்டி - விமர்சனம்

காடுவெட்டி – விமர்சனம்

என்னதான் பைரவரை குளிப்பாட்டி நடு வீட்டுல வச்சாலும் அவர் நக்கி தான் சாப்பிடுவாருன்னு ஒரு பழமொழி உண்டு. அதேபோல தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு பல இயக்குனர்கள் எடுத்து சென்று கொண்டிருக்கின்றனர். உலக மக்கள் அனைவரும் தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்கின்றனர். ஆனால் இன்னும் ஜாதி, மதம், ஆணவ படுகொலை என பழைய பஞ்சாங்கத்தை பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு சிலரின் கைவண்ணத்தில் வெளிவந்திருக்கும் படம் தான் காடுவெட்டி.

இந்தத் திரைப்படத்தில் மாநகரம் மற்றும் நகர பகுதிகளில் காதலையும், காதலர்களையும் அவருடைய பெற்றோர்களும் எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதையும், அதே காதலை சாதிய உணர்வுகள் வேரூன்றி இருக்கும் கிராம பகுதிகளில் எப்படி அணுகுகிறார்கள் என்பதையும் மையப்படுத்தி இப்படத்தின் கதை, திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

அதிலும் நகர் பகுதிகளில் உள்ள பெற்றோர்கள் கல்வி அறிவையும், பொருளாதார தன்னிறைவையும் பெற்றிருப்பதால், காதலை எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் ஏற்றுக் கொள்கிறார்கள் என்று நகரத்து காதல் கதைக்கு சில காட்சிகளிலேயே முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, கிராமத்துக்கு வருகிறார்கள்.

இங்கு காதலர்களுக்கு சாதி, ஊர்மக்கள், உறவினர், சாதி கட்சி தலைவர்கள், சாதி அரசியல், பெற்றோர்கள் ஆகியோர்களை எதிர்த்து போராட வேண்டிய சூழல் உள்ளது என காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். இதைக் கடந்து காதலர்கள் இணைந்தாலும் அவர்களை.. எதிரிகள் அழித்துவிட காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் இயக்குநர் விவரித்திருக்கிறார்.

இந்தத் திரைப்படத்தில் இன்றும் கிராமப்புறங்களில் சில பிரிவு மக்களிடையே பின்பற்றப்படும் சடங்குகள், சம்பிரதாயங்கள் போன்றவை புதிதாக இருப்பதால் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்துகிறது. கிராமீய மணக்கும் பாடல்கள்.. ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஆர் கே சுரேஷ் ஒரு சாதி ரீதியிலான அரசியல் கட்சிக்கு முக்கிய பிரமுகராக இருக்கிறார். இவர் காதலர்களுக்கும்,  காதலுக்கும் எப்படி உதவுகிறார் என்பதும், இதற்காக அவர் சிறைக்கு செல்கிறார் என காண்பித்திருப்பதும் எந்த வகையான தாக்கத்தை பார்வையாளர்களிடத்தில் ஏற்படுத்தும் என்பதை இயக்குநர் தான் விளக்க வேண்டும். ஏனெனில் இந்த கதாபாத்திரத்தின் தொடக்கமும் நம்பும் படியாக இல்லை. முடிவும் ஏற்கும் படியாக இல்லை.

படத்தில் பஞ்சாயத்து காட்சி ஒன்று காண்பிக்கப்படும். இதில் நகைச்சுவை என்ற பெயரில்… அடுத்தவரின் மனைவியைப் பற்றி பஞ்சாயத்து செய்யும் நபரும், பஞ்சாயத்தில் இருக்கும் நபரும் கிண்டலடிக்கும் வசனங்கள்… அபத்தமானவையாகவும், ஆபத்தானவையாகவும், கதை களத்திற்கு  முரணானதாகவும் அமைந்திருக்கிறது. இது மட்டுமல்ல ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள். இருந்தாலும் படத்தை ரசிக்க வைக்க ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை ஓரளவு உதவுகிறது.

‘திரௌபதி’ எனும் திரைப்படத்தில் இயக்குநர் மோகன் ஜி நாடக காதலை பற்றி உரத்து பேசியிருப்பார். அதே விடயத்தை உரத்து பேசாமல்… ஸ்வரம் குறைவான தொனியில் பேசி இருக்கும் படம்தான் ‘காடுவெட்டி’.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஆர் கே சுரேஷ் தனது வழக்கமான அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்கிறார். நாயகியாக நடித்திருக்கும் சங்கீர்த்தனா விபின் தமிழ் திரையுலகில் அழகு+இளமை+ நடிப்பு+ திறமை என அனைத்தும் ஒன்றிணைந்திருப்பதால் சிறந்த கலைஞராக வலம் வரக்கூடும். இயக்குநரும், நடிகருமான சுப்பிரமணிய சிவா.. இந்தத் திரைப்படத்தில் நாயகியின் தந்தையாக நடித்து அற்புதமான குணச்சித்திர நடிப்பை வழங்கி ரசிகர்களின் மனதில் எளிதாக இடம் பிடிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img